உரிமம் பெற்ற வங்கிகளின் வாடிக்கையாளர் சாசனம்

 1. அறிமுகம்

  இச்சாசனமானது வாடிக்கையாளர்கள் உரிமம் பெற்ற வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர்களால் எதிர்நோக்கப்படும் நியாயமான வங்கி நடைமுறைகளின் முக்கிய நியமங்களை உருவாக்குவதுடன் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வாடிக்கையாளர் பாதுகாப்புத் தொடர்பாக ஒரு “நடத்தைக் கோட்பாட்டினை” பின்பற்றுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகின்றது. இச்சாசனம் மேலும் உரிமம் பெற்ற வங்கிகளுடன் வாடிக்கையாளர்கள் திடமான உறவினைப் பேணும் வகையில் அவர்களது கடப்பாடுகளின் ஒரு தொகுப்பையும் உள்ளடக்குகின்றது.

 2. வங்கித் தொழில் சாதனங்கள் / சேவைகளைப் புரிந்து கொள்ளுதலும் தகவல்களைப் பெறுதலும்

  வாடிக்கையாளர் வங்கிகளினால் வழங்கப்படுகின்ற நிதிசார் சாதனங்கள் / சேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் உண்மையான தகவல்களைப் பெறுவதற்குமான உரிமையினைக் கொண்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக வங்கிகளின் சில நல்ல நடைமுறைகள் பின்வருமாறு இருத்தல் வேண்டும்:

  1. உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் சாதனங்கள் / சேவைகள் தொடர்பான போதியளவு தகவல்களை வழங்குதல், அவற்றின் நிதிசார் விளைவுகளை விபரித்தல் ஆகியன மூலம் வாடிக்கையாளர்கள் அச் சாதனங்கள் / சேவைகள் பற்றி புரிந்து கொள்ள உதவுவதுடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான வங்கித் தொழில் சாதனங்கள் / சேவைகளைத் தெரிவு செய்ய உதவி செய்ய வேண்டும்.
  2. ஒவ்வொரு உரிமம் பெற்ற வங்கியும் அதனுடைய சாதனங்கள் / சேவைகளுக்கு தனித்தனியான அல்லது ஒருங்கிணைந்த முக்கியமான உண்மைத் தகவல்களைக் கொண்ட எளிய மொழிநடையில் அமைந்த சிறு புத்தகம் / துண்டுப் பிரசுர வடிவத்திலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். அத்தோடு, சாதனங்கள் / சேவைகளை நாடிச் செல்லுகின்ற வாடிக்கையாளர்களுக்கு அவை விநியோகிக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய புத்தகம் / துண்டுப் பிரசுரமானது ஆகக் குறைந்தது பின்வரும் அடிப்படைத் தகவல்களைக் கொண்டிருப்பதுடன் வாடிக்கையாளர்களினால் விரும்பப்படும் மொழியிலும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் (அதாவது சிங்களம்,தமிழ்,ஆங்கிலம்;):
   1. சாதனங்கள் / சேவைகள் பற்றிய விளக்கம்.
   2. வாடிக்கையாளர்களுக்கான ஏதாவது சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் உள்ளடங்கலான நிதி மற்றும் ஏனைய நன்மைகள்.
   3. வாடிக்கையாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணங்கள் / அறவீடுகள் / தரகுகள் மற்றும் வட்டி என்பன.
   4. சாதனங்கள் / சேவைகளினைப் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.
   5. பிரதான நியதிகளும் நிபந்தனைகளும்.
   6. வாடிக்கையாளர்களுக்கான ஒரு பொதுவான முறைப்பாடு செய்யும் வழிமுறைகள்.
  3. ஏதாவது ஊடகம் மற்றும் விளம்பரச் சாதனங்களில் வங்கிகளால் வழங்கப்படும் சாதனங்கள் / சேவைகள் பற்றி அவர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையான தகவல்களைக் கொண்டிருப்பதுடன் இவ் விளம்பரங்கள் பொது மக்களை தவறாக வழி நடத்தக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்காமல் உரிய வாடிக்கையாளர்களால் புரிந்து கொள்ள கூடியனவாக இருக்க வேண்டும். மேலும், அனைத்து விளம்பரங்களும் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை வழங்குவதுடன் சம்பந்தப்பட்ட வங்கியானது இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு உரிமம் பெற்ற வங்கி என்பதனையும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
  4. தேவைப்படும்போது வங்கியின் சாதனங்கள் / சேவைகள் என்பனவற்றின் விளம்பரங்கள் தொடர்பான கட்டணங்கள், அறவீடுகள் மற்றும் வட்டி வீதங்கள் போன்ற மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்கள் கேட்டுக் கொள்ளப்படுமிடத்து வங்கியினால் வழங்கப்பட வேண்டும்.
  5. பின்வரும் தகவல்கள் உரிமம்பெற்ற வங்கிகளின் தலைமைக் காரியாலயங்கள், அனைத்துக் கிளைகள், மற்றும் ஏனைய வங்கித் தொழில் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெளிவாக காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்.
   1. அனைத்து வைப்புக்கள் மற்றும் கடன் சாதனங்கள் மீதான நடைமுறை வட்டி வீதங்கள்.
   2. வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள்.
   3. முக்கியமான குறிப்புக்களுடன் வங்கியின் கொடுகடன் தரமிடல்.
   4. நிதிசார் குறைகேள் அதிகாரியினுடையதும், கடன் ஆலோசனை நிலையத்தினதும் தொடர்பு கொள்ளும் விபரங்கள்
   5. வங்கித் தொழில் நேரங்களும் விடுமுறை பற்றிய அறிவித்தல்களும்.
   6. மற்றைய ஏதேனும் தொடர்புபட்ட தகவல்கள்.
  6. செயற்படும் வகையிலுள்ள சேமிப்புக் கணக்கு புத்தகம் தவிர்ந்த ஏனைய சேவைகள் அல்லது வாடிக்கையாளர்களின் வைப்பு அல்லது கடன் கணக்குகளிலுள்ள மீதிகளும் அவை தொடர்பான கொடுக்கல் வாங்கல்களும் தொடர்பான ஒரு தவணைக் கூற்று வாடிக்கையாளர்களுக்கு அவர்களால் தெரிவு செய்ததற்கு ஏற்ப அச்சிடப்பட்ட வடிவிலோ அல்லது இலத்திரனியல் வடிவிலோ அனுப்பப்பட வேண்டும்.
   கடன் அட்டைக் கூற்றுக்களானது செலுத்த வேண்டிய ஆகக் குறைந்த கட்டணத் தொகையையும் ஆகக் குறைந்த தொகை மட்டும் செலுத்தப்பட்டால் அறவிடப்படும் மொத்த வட்டித் தொகையையும் ஆகக் குறைந்த கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அறவிடப்படும் தாமதக் கொடுப்பனவுக் கட்டணத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
  7. உரிமம் பெற்ற வங்கிகள் விசேடமான நிதிசார் அறிவூட்டும் நிகழ்ச்சிகள் மூலமாக நிதிசார் சாதனங்கள் / சேவைகள் பற்றியும் அவற்றின் இடர்நேர்வுகள் பற்றியும் வாடிக்கையாளர் கொண்டிருக்கும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
  8. உரிமம் பெற்ற வங்கிகளானது, “நடத்தைக் கோட்பாட்டில்” சொல்லப்பட்டுள்ள நடைமுறைகளையும் செயல் முறைகளையும் வங்கியின் அலுவலர்கள் பின்பற்றுகின்றார்களா என்பதனையும், தம்மால் வழங்கப்படும் சாதனங்கள் / சேவைகள் என்பன தொடர்புபட்ட சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகின்றனவா என்பதனையும், வெளிப்படைத் தன்மை மற்றும் உண்மைத் தன்மைக் கோட்பாடுகள் பேணப்படுகின்றனவா என்பதனையும் உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்கள் நியாமாகவும் நம்பகத் தன்மையுடனும் செயற்பட வேண்டும்.
 3. சாதனங்கள் / சேவைகள் மீதான நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் விழிப்புணர்வும் புரிந்து கொள்ளுதலும்

  வாடிக்கையாளர்கள் அவர்கள் வங்கிகளிடமிருந்து பெறுகின்ற ஒவ்வொரு சாதனங்கள் அல்லது சேவைகளுக்கும் தொடர்புடைய நியதிகளை மற்றும் நிபந்தனைகளை அணுகுவதற்கும் அவற்றை பூரணமாக புரிந்து கொள்வதற்கும் உரிமை கொண்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக, உரிமம் பெற்ற வங்கிகள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்:

  1. ஒவ்வொரு சாதனங்கள் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களால் விரும்பப்படும் மொழிகளில் கிடைக்கச் செய்தல்.
  2. இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பிரதியானது எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஒரு சாதனம் அல்லது சேவையை வழங்குவதற்கு அல்லது பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னர் முன்கூட்டியே கொடுக்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களால் கேட்கப்படும் ஏதாவது விளக்கங்களை தெளிவாக விளங்கப்படுத்தப்படுத்தல்.
  3. ஒரு தொடர்பு அலுவலரின் கடமைகளைக் கொண்டிருக்கும் ஒரு அலுவலர் சாதனங்கள் / சேவைகளின் அம்சங்களையும், நியதிகள் மற்றும் நிபந்தனைகளையும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விபரித்து, கிடைக்கக் கூடியதாகவுள்ள மாற்று சாதனங்கள் சேவைகள் பற்றிய ஒரு ஒப்பீட்டினையும் வழங்குவதுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தீர்;மானத்தினை மேற்கொள்வதற்கான நியாயமான நேரத்தினையும் வழங்குதல்.
  4. சாதனங்கள் அல்லது சேவைகளினுடைய விபரங்களும், அவற்றினுடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பெறப்பட்டது எனவும் அவை விபரிக்கப்பட்டன எனவும், புரிந்து கொள்ளப்பட்டன எனவும் வாடிக்கையாளர்களிலிருந்தான ஒரு உறுதிப்பாட்டை எழுத்து மூலமாகப் பெறுதல்.
  5. சாதனங்கள் அல்லது சேவைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் வாடிக்கையாளரால் பூரணப்படுத்தப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும். (பூரணப்படுத்தப்படாத ஆவணங்கள், மற்றும் வெற்றுத்தாள்களில் / ஆவணங்களில் கையொப்பங்கள் பெறப்படுதல் என்பன தவிர்க்கப்படுதல் வேண்டும்).
  6. சாதனங்கள் அல்லது சேவைகள் மீதான ஒப்புக் கொள்ளப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உரிமம் பெற்ற வங்கிகளால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றங்களும் எழுத்து மூலமாகவோ அல்லது பத்திரிகை அறிவுறுத்தல் ஊடாகவோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான வழியில் அம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.

  வாடிக்கையாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டவற்றை ‘நியதிகள் மற்றும் நிபந்தனைகளை” விசேடமாக அறிந்து கொள்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்கள்.

  1. வட்டிக் கொடுப்பனவுகளைக் கணிக்கும் முறைமை உள்ளடங்கலாக வாடிக்கையாளரால் செலுத்தப்படுவதற்கு வேண்டப்படுகின்ற ஏதாவது வட்டி வீதங்கள் / கட்டணங்கள் மற்றும் தரகுகள் போன்ற வங்கியினுடைய பொது அறவீடுகள் பற்றிய விபரங்கள்.
  2. முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் தீர்வு காணும் முறைமைக்கான வங்கியினுடைய செயல்முறை.
  3. வாடிக்கையாளரால் அவர்களின் கடப்பாடுகள் மீது ஏதாவது தவறு இழைக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு வங்கி பின்பற்றக் கூடிய மீட்பு நடவடிக்கைகளின் முறைமையும் அவை சம்பந்தமான வங்கியின் செலவை வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப் பெறுதலும்.
  4. வாடிக்கையாளர்களால் சாதனம் / சேவை முதிர்ச்சியடையுமுன் பெறப்படும்போது அல்லது இரத்துச் செய்யப்படும்போதான தொடர்புபட்ட வாடிக்கையாளர்களினால் செலுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட ஏதாவது நட்டஈடு.
  5. கணக்குகளினை ஆரம்பித்தல், கணக்குகளினை மூடுதல், கணக்குகளினைப் பராமரித்தல் (உñம் ஆகக் குறைந்த இருப்பு) வாடிக்கையாளர்களின் நிதிப் பரிமாற்றம் தொடர்பான ஏதாவது கட்டுப்பாடுகள் மற்றும் கைவிடப்பட்ட சொத்துக்கள் மற்றும் செயற்படாத கணக்குகள் மீதான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
  6. வாடிக்கையாளர்களின் தகவலினை சட்ட பூர்வமாக அதிகாரமளிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு வெளிப்படுத்தல்.
  7. (i) சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் குறிக்கப்பட்ட வரையறைக்கு மேலான கொடுக்கல் வாங்கல்களை நிதிசார் புலனாய்வு பிரிவிற்கு அறிக்கையிடல் (ii) கடன் அட்டைகள் / நிதிசார் கருவிகள் களவு போகின்ற சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர் பின்பற்ற வேண்டிய அறிக்கையிடும் செயல்முறைகள் (iii) வங்கி மற்றும் வாடிக்கையாளரினுடைய பொறுப்புகள் என்பவை தொடர்பான விதிகள்.
  8. ஒரு கடனுக்காக பிணையாக வைத்திருக்கப்படும் சொத்துக்களை மீட்பதைத் தடை செய்யும்போது வங்கியினால் பின்பற்றப்படும் செயல்முறைகளும் அவற்றின் மீதான பின் விளைவுகளும், வாடிக்கையாளருக்குக் கிடைக்கக் கூடியதான தேர்வுகளும்.
 4. வங்கிகளால் சாதனங்கள் / சேவைகளை இரத்துச் செய்தல் மீளப் பெறுதல் என்ப வற்றிலிருந்தான நட்டஈடு

  விசேடமாக வைப்புச் சாதனங்களான ஏற்கனவே ஒப்பந்தத்திலிருக்கும் சாதனம் / அல்லது சேவையை மீளப் பெறுவதற்கு / இரத்துச் செய்வதற்கு ஒரு வங்கி எதிர்பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட வெளியேறும் நட்டஈட்டு திட்டத்துடன் போதுமானளவு காலத்தினையும் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் உரிமை கொண்டிருக்கிறார்கள்.

 5. வங்கிகளின் முகவர்களிட மிருந்து பாதுகாத்தல்.

  உரிமம் பெற்ற வங்கிகளினால் வாடிக்கையாளர் சேவைகளுக்காக நியமிக்கப்பட்ட முகவர்களினுடைய விபரங்களை அறிவதற்கும், பின்வரும் ஏதாவது ஒரு நடவடிக்கையை தவிர்ப்பதற்கும் வங்கிகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நடத்தை கோட்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கும் வாடிக்கையாளர்கள் உரிமை கொண்டிருக்கின்றார்கள்.

  1. வாடிக்கையாளர்களை துன்புறுத்தல் செய்தல்.
  2. அவமரியாதையான கடன் சேகரிப்பு நடைமுறைகள்.
  3. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஏனையோருக்கு வெளிப்படுத்தல்.
  4. சாதனம் / சேவைகள் பற்றி பிழையான அல்லது தவறுதலான தகவல்களை வழங்குதல்.
  5. வங்கியினுடைய சாதனங்கள் / சேவைகளை பொது மக்கள் அல்லது வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முறையற்ற விதத்தில் தூண்டுதல்.
  6. வங்கிக்கு வெளியே ஏதாவது ஒரு பாதுகாப்பு ஆவணத்தில் கையொப்பத்தை பெறுவதில் ஈடுபடுதல
 6. முறையீட்டு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம்.

  வாடிக்கையாளர்கள் தமது முறைப்பாடுகளை வெளிப்படையாகவும் வினைத்திறனுடனும் தீர்த்து வைப்பதற்கு உரிமை கொண்டுள்ளார்கள். இதன் பிரகாரம் உரிமம் பெற்ற வங்கிகள்

  1. வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையிலிருக்கும் முரண்பாட்டினை விரைவில் நிவர்த்தி செய்வதற்கும், குறுங்காலத்திற்குள் முறைப்பாடுகளை கையாளுவதற்கும், வாடிக்கையாளர்கள் திருப்தியாகாதவிடத்தில் முறைப்பாடுகளை முன்னெடுத்து வழிநடத்துவதற்கும் மற்றும் தவறாக ஏதாவது கட்டணம் அறவிடப்பட்டிருப்பின் மீளச் செலுத்தவும் விரைவானதும், வினைத்திறனுமான தீர்வினை அமுல்படுத்தல் வேண்டும்.
  2. முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக எழுத்துமூலமான முறைமையை வைத்திருப்பதுடன் அம் முறைப்பாடுகளைத் தீர் ; ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.
  3. நியாயமான குறுகிய காலத்திற்குள் முறையீடு பெற்றுக் கொண்டதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துவதுடன், முறையீடு தொடர்பாக கையாளப்படும் தீர்வு முறை மற்றும் முறையீட்டை கையாளும் அலுவலர் / அலுவலர்களின் தொடர்பு விபரங்களையும் முறையீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.
  4. வாய்மூலம் அல்லது எழுத்துமூலம் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன் கட்டாயமாக எழுத்துமூலம் மட்டும்தான் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தலாகாது.
  5. செயற்பாட்டு ஈடர்நேர்வுகளுடன் தொடர்புபட்ட இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவின் கடமையின் ஒரு பகுதியாக முறைப்பாடுகள் மற்றும் தீர்;வுச் செயற்பாடுகள் தொடர்பாக முகாமைத்துவ தகவல் முறைமையை நிறுவுதல் வேண்டும்.
  6. ஒவ்வொரு கிளையிலும் அல்லது அலுவலகத்திலும் முறைப்பாடுகளை கையாளுவதற்கு மற்றும் தகவல்களை முகாமைசெய்வதற்கு ஒரு அலுவலரை ஒதுக்க வேண்டும்.
  7. முறைப்பாடானது திருப்தியாக தீர்;வு காணப்படாதவிடத்தில் ‘நிதிசார் குறைகேள் அதிகாரி” அல்லது நீதிமன்றங்கள் ஊடான கட்டுப்படியான மற்றும் தகுதியான போக்கிடத்தை நாடுவதற்கு வாடிக்கையாளருக்கு ஆலோசனை கூறுதல் வேண்டும்.
 7. விசேட கவனிப்பும் அக்கறையும்.

  வாடிக்கையாளர்களில் அதாவது வயோதிபர், வலது குறைந்தோர் அல்லது குறைந்த நிதிசார் கல்வியறிவுடைய வாடிக்கையாளர் நியாயமான வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக விசேட கவனத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் உரித்துடையவர்களாவர்.

 8. வங்கி சார்ந்த வாடிக்கையாளரின் கடப்பாடுகள்

  வாடிக்கையாளர்கள் தமது கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வங்கிகளுடன் நல்லுறவை பேண வேண்டும். இது தொடர்பாக:

  1. வாடிக்கையாளர்கள் தமது மீளச் செலுத்தும் இயலுமை வரையறைக்கு மேல் கடன் பெறலாகாது
  2. வாடிக்கையாளர்கள் மீள் கொடுப்பனவுகள் அல்லது தவணைக் கட்டணங்கள் பாக்கி நிலுவைகளுக்கு செல்வதற்கு இடமளிக்காமல் இருப்பதுடன் காலம் தவறாத மீள கொடுப்பனவுகள் வங்கிகளுடன் சுமுகமான உறவுகளை உருவாக்கும் என்பதனை அறிந்திருக்க வேண்டும்.
  3. வாடிக்கையாளர் குறிப்பிட்ட கடன் முடிவு திகதிக்கு முன்னர் அவருடைய கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால், கடனை பெற்றுக் கொள்ளும்போது ஒப்புக்கொண்டபடி கடன் தொகையினைவிட மேலதிக ஒரு பணத் தொகையினைச் செலுத்துதல் வேண்டும்.
  4. வாடிக்கையாளர் தான் ஏற்றுக் கொண்டபடி கடன் தொகையினை செலுத்த முடியாமல் போனால் “நியதிகள் மற்றும் நிபந்தனைகளில்” குறிப்பிடப்பட்டதைப்போன்று வங்கியினுடைய செலவுகள் உள்ளடங்கலாக வங்கிக்குச் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையினை மீட்டெடுப்பதற்கான உரித்தை வங்கி கொண்டிருக்கும்.
  5. வாடிக்கையாளர் நிதியியல் இடர்பாடுகளை சந்தித்தால், அவர்கள் வங்கிக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அது பற்றி தெரிவித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் வங்கியொன்று வாடிக்கையாளரின் பிரச்சனைகளை கலந்தாலோசிக்குமானால் அது வாடிக்கையாளருக்கும் வங்கிக்குமிடையில் ஒரு தீர்வினை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
  6. வாடிக்கையாளரின் கடன் பணம் செலுத்தத் தவறும் போது, முதலாவது நடவடிக்கையாக வங்கி வாடிக்கையாளரை தொடர்பு கொள்ளல் வேண்டும். எனவே எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளர்கள் அவர்களின் முகவரி; மற்றும் தொடர்பு விபரங்களில் தென்படும் மாற்றங்களை வங்கிக்குக் கட்டாயமாக அறிவித்தல் வேண்டும்.
  7. வாடிக்கையாளர்கள் ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முன்னர் வங்கிகளினால் வழங்கப்படும் சாதனங்கள் / சேவைகள் பற்றிய முழு அறிவு மற்றும் புரிந்துணர்வினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  8. வாடிக்கையாளர்கள் தேவைப்படுத்தப்பட்ட முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் மற்றும் துணை ஆவணங்களையும் உரிய நேரத்தில் வங்கிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  9. வாடிக்கையாளர்கள் வங்கியுடன் செய்யும் சகல கொடுக்கல் வாங்கல்களிலும் உரிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
  10. வாடிக்கையாளர்கள் வங்கியினுடனான அவர்களினுடைய கணக்குகளில் ஏதாவது மோசடி நிகழ்ந்தால் அல்லது அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அத்தகைய சம்பவங்களை அவர்கள் அறிய நேரிடும் போது உரிய முறையில் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
  11. வாடிக்கையாளர்கள் வங்கிகளால் வழங்கப்பட்ட ஏனைய இலத்திரனியல் அட்டைகளினுடைய பாதுகாப்பு அளவீடுகள், இரகசியக் குறியீட்டு இலக்கங்களைக் கையாளுதல், பாதுகாத்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும்.
  12. வாடிக்கையாளர் நீதிமன்ற சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டாலொழிய தவிர, வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையின் மீதானதொரு தகராறு நீங்கலான மேற்கூறப்பட்ட வாசகங்கள் 2 தொடக்கம் 7 வரையிலான வங்கிகளின் கடப்பாடுகளில் ஏதாவதொரு செயற்பாட்டுக் குறைவை அவர்களின் கடன் செலுத்தாமைக்கு அல்லது தாமதமாக செலுத்தலுக்கு ஒரு காரணமாகக் கொள்ளக் கூடாது. அத்தகைய எல்லாச் சம்பவங்களும் தனித்தனியாக அல்லது வெவ்வேறாக தீர்க்கப்பட வேண்டும்.